Wednesday, 30 November 2016

எள் இன்றி தயாராகுது நல்லெண்ணெய் எண்ணெய்யும் இங்கே போலி: மக்களின் ஆரோக்கியம் காலி?

எள் இன்றி தயாராகுது நல்லெண்ணெய் எண்ணெய்யும் இங்கே போலி: மக்களின் ஆரோக்கியம் காலி?

 ஒவ்வொரு எண்ணெய்க்கும் அது சார்ந்தே பெயர் இருக்கும். எள்ளில் பெற்ற எண்ணெய்க்கு மட்டுமே நல்ல எண்ணெய் எனப் பெயர் வைத்தனர். பசு நெய் பயன்படுத்திய காலத்தில் எள் நெய் என்றவர்கள் நாளடைவில் எண்ணெய் என்ற னர். அப்படிப் பார்த்தால், எண்ணெய் என்றாலே அது எள்ளில் பெற்ற நல்லெண்ணெய்தான்.

எண்ணெய்க்கும், தமிழருக்குமான பந்தம் ஆழமானது. எள்ளும், பனையும் நம் தமிழகத்தின் தொன்மைக் காட்டுப்பயிர்கள். எனவேதான் அன்று பனைக் கருப்பட்டியுடன் எள் சேர்த்து ஆட்டியெடுத்த எண்ணெய் உணவாகவும், உடல் காக்கும் மருந்தாகவும் பயன்பட்டது. கிறிஸ்துவிற்கும் முற்பட்ட காலத்திலிருந்தே தமிழர் உணவில் இந்த எள்நெய் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. வைத்தியருக்கு கொடுப்பதை வாணியருக்கு கொடு என்ற பழமொழி இன்றும் இருக்கிறது. உணவாக, மருந்தாக, தலைக்கு வைக்க உடலில் தேய்க்க என நல்லெண்ணெய் மனித ஆரோக்கியத்தின் அடையாளம் என்றே சொல்லலாம்.

கொலஸ்ட்ரால் அளவு குறைக்கும் லினோலிக் அமிலம் இதில் இருப்பதால் இதய நோய் வராது. ஜீரணிக்கும் திறன்மிக்கது. பலதரப்பட்ட மருத்துவ குணங்கள் கொண்டிருக்கிறது. மாடுகள் சுற்றிவர செக்குகளில் ஆட்டியெடுத்த இந்த எள் எண்ணெய் கால மாற்றத்தில் பவர்கனி, லோட்டரி மிஷின், எக்ஸ்பிளர் என இயந்திரச் செக்குகளில் இப்போது ஆட்டியெடுக்கப்படுகிறது. முன்பு 10 கிலோ எள்ளுக்கு ஒரு கிலோ கருப்பட்டி சேர்த்து ஆட்டி நல்லெண்ணெய் தயாரானது. இப்போது வணிக வருவாய் கருதி கிலோ ரூ.120 வரை விற்பதால் கருப்பட்டிக்குப் பதில் கிலோ ரூ.20க்குள் கிடைக்கும் மொலாசஸ் என்ற சர்க்கரை ஆலைக் கழிவைக் கொட்டி ஆட்டி நல்லெண்ணெய் எடுக்கப்படுகிறது. இதைவிட கொடுமையாக, சமீபகாலமாக எள் இல்லாமலேயே நல்லெண்ணெய் தயாரித்து விற்கும் மோசடி தலைதூக்கி இருக்கிறது.
குப்பையில் கொட்ட வேண்டிய நாள்பட்ட கெட்டுப்போன முந்திரிப்பருப்பை வாங்கி, அதனை செக்கிலிட்டு நசுக்கி கழிவெண்ணெய் எடுக்கப்படுகிறது. விலை குறைந்து விற்கும் பாமாயில் அல்லது ரைஸ் ஆயில் 15 கிலோவுடன், அரைலிட்டர் முந்திரி கழிவெண்ணெய் கொட்டிக் கலந்தால் நல்லெண்ணெய் வாசத்தில், வண்ணத்தில் கலப்பட எண்ணெய் கிடைக்கிறது. ரூ.60க்குள் தயாராகும் இந்த போலி எண்ணெய்யை, நல்லெண்ணெய் என்ற பெயரில் மூன்று மடங்கு விலையில் லிட்டர் ரூ.180க்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

இந்த கலப்பட எண்ணெய்யை அதிகாரிகள் கண்டுபிடித்தாலும், குற்ற நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக சிலர் இந்த எண்ணெய் டின் மீது பார்வைக்குத் தெரியாத ஒரு ஓரத்தில் தீப உபயோகத்திற்கு மட்டும் எனும் பொருள்பட லைட்டிங் பர்ப்பஸ் என போட்டுக் கொள்கின்றனர். பொதுவாக அடர்த்தியான பிரவுன் நிறத்திலான தரமான நல்லெண்ணெய்யை பிரிட்ஜில் வைத்தால் உறையாது. ஆனால் பாமாயில், முந்திரி கழிவெண்ணெய்யில் தயாராகும் இந்த போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்ததும் உறைந்து விடும்.

எனவே பிறர் போலி என்று கண்டுபிடிக்காமல் இருக்க கலப்படக் கும்பல் ஒரு நூதன வழியைக் கையாள்கிறது. அதாவது, பாம் ஒலி பெயரில் ரீபைண்ட் செய்யப்பட்ட பாமாயில் விற்கிறது. இதனை கும்பல் வாங்கி, இதனுடன் முந்திரிக் கழிவெண்ணெய் கலந்து போலி நல்லெண்ணெய் தயாரிக்கின்றன. இந்த எண்ணெய் தெளிவாக இருப்பதால் இதனை தும்பை எள் எண்ணெய் எனக்கூறி லிட்டர் ரூ.290 வரை விற்று ஐந்து மடங்கு லாபம் பார்க்கின்றனர். இவ்வகையில் தயராகும் போலி நல்லெண்ணெய் பிரிட்ஜில் வைத்தால் உறைவதில்லை. மக்களும், அதிகாரிகளும் இதைப் போலி என்றே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நல்லெண்ணெய்யாகவே இது இருக்கிறது.

நம் பண்பாட்டு அடையாளமாக, மருந்தே உணவாக உள்ள நல்லெண்ணெய் வாங்குவோர் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து, போலி எண்ணெய்யைத் தவிர்ப்பது அவசியம். அதேபோல், இதுபோன்ற போலி எண்ணெய் தயாரித்து விற்போர் மீது அரசு கடும் நடவடிக்கைகள் எடுப்பதும் மிக அவசியம்.

நன்றி : தினகரன்

பகிர்வோம்,சமூக ஆரோக்கியத்தில் நமது பங்கும் இருக்கட்டும்.
🌿🌿உயிர் இயற்கை விவசாயிகள் நேரடி விற்பனை நிலையம். ஈரோடு🌿🌿


EmoticonEmoticon